Go to content Go to menu

News

 சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள்

வெளியீட்டு விழா

bapasi-chennai-bookfair-2016-book-launch---c.p.sivarasan.jpg    39 வது சென்னைப் புத்தகக் காட்சி சென்னைத் தீவுத் திடலில் 01-06-2016 அன்று தொடங்கியது. இதன் 4 -ம் நாளான இன்று (04-06-2016) கீதம் பதிப்பகத்தின் 6 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது. இவ் விழாவிற்கு எழில் இலக்கியப் பேரவையின் தலைவர் முனைவர் எழில். சோம பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செம்மொழிப் போராளி கவிஞர் க.ச. கலையரசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி அனைத்து நூலாசிரியர்களையும், கீதம் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.ஞானசி அவர்களையும் வாழ்த்தினார்.பிரபல திரைப்பட பாடலாசிரியர்கள் கவிஞர் அண்ணாமலை மற்றும் கவிஞர் பிரியன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கவிஞர் இளையராஜா அவர்கள் எழுதிய "உறங்கும் பூக்களே விடிந்ததும் கூறுங்கள்" என்ற கவிதை நூலினையும், 36 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து உருவாக்கிய "கவியாட்படை" என்ற கவிதை நூலினையும் விஜய நேத்ரன் அவர்கள் எழுதிய " வேள்விப்பூக்கள்" என்ற கதை நூலினையும், பி.டி.வசந்த் அவர்கள் எழுதிய " இதய நோய்களும் நவீன சிகிட்சை முறைகளும்" என்ற மருத்துவ நூலினையும் செ.பா.சிவராசன் அவர்கள் எழுதிய " முதல்வரின் நாட்குறிப்பு" மற்றும் "கணக்கதிகாரம்" ஆகிய 6 நூல்களையும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை அவர்கள் வெளியிட திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிரியன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் வெளியிட்டு பேசிய கவிஞர் அண்ணாமலை அவர்கள் "கவிஞர்கள் கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள். சமூகம் கவிஞர்களை மதிக்கப் பழக வேண்டும்" எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து நூல் பெற்றுக் கொண்டு பேசிய கவிஞர் பிரியன் அவர்கள் "ஒன்று படுதல்........      நகர்தல் " என கவியாட்படையில் 36 கவிஞர்கள் ஆசிரியர்களாக ஒருங்கிணைந்து நூல் படைத்திருப்பதைப் பற்றி பேசி கவிஞர்களை உற்சாகமூட்டினார். கணக்கதிகாரம்-2 என்ற நூலினை மதிப்புரை செய்து பேசிய முனைவர் எழில். சோம பொன்னுசாமி அவர்கள் "சங்க காலத்தில் கணக்கதிகாரம் என ஒரு நூல் உள்ளதால் இந்த நூலிற்கு கணக்கதிகாரம் - 2 என பெயரிட்டுள்ளதாகவும், இந்த நூல் கால்குலேட்டர் இல்லாமல் கணக்குகளை எளிமையாக செய்ய உதவும்" என்றார். முதல்வரின் நாட்குறிப்பு என்ற நூலினை மதிப்புரை செய்து பேசிய கவி. தங்க ஆரோக்கியதாசன் அவர்கள் " இந்த நூலிற்கு கதா நாயகன் என ஒருவருமில்லை.. இதன் கதா நாயகர்கள் சமூகப்பிரச்சினைகள்தான். வெறுமனே சமூகப் பிரச்சினைகளைக் கூறாமல் அதற்கான தீர்வுகளையும் எழுதியிருக்கிறார். உதாரணமாக காதலினால் நிறைய கொலைகள்,குற்றங்கள் நடக்க்கிறது. எனவே அதற்குத் தீர்வாக அரசாங்க இணையதளத்தில் சென்று காதலர்கள் காதலைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். காதலர்கள் எனப் பதிவு செய்த 3 வருடங்களுக்குப் பிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் திருமணம் செய்து கொள்ளும் போது அரசாங்கப் பதிவு செய்த சான்று தேவை என அழகானதொரு புதிய தீர்வை  கூறியுள்ளார். மதுவினைக் கட்டுப்படுத்த ஒருவர் மது வாங்கிய 6 மணி நேரத்திற்குப் பிறகுதான் அடுத்த குப்பி வழங்க வேண்டும் . இதைக் கட்டுப்படுத்த பார்கோடு உடன் கூடிய மது அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்வு கண்டுள்ளார். இந்த முதல்வரின் நாட்குறிப்பு எனும் நூல் உங்கள் ஒவ்வொருவருடைய பாக்கெட்களிலும் இருக்க வேண்டிய டைரி " எனக் குறிப்பிட்டார்.

வேள்விப் பூக்கள் நூலை மதிப்புரை செய்து பேசிய கிலக்காடி முனுசாமி அவர்கள் " இருவருக்கிடையே உள்ள நட்பை ஒரு நெல்லிக்கனி நிலை நிறுத்தியிருக்கிறது. இன்றைய காதலையும், நட்பையும் இனி இந்த நூல்தான் தீர்மானிக்க முடியும். நட்பைத் தொலைத்துக் காதலைத் தேடுபவர்களுக்கும், காதலைத் தொலைத்து நட்பைத் தேடுபவர்களுக்கும் ஒரு கருவிதான் இந்த வேள்விப்பூக்கள்" என்றார்.

உறங்கும் பூக்களே விடிந்ததும் கூறுங்கள் என்ற நூலினை மதிப்புரை செய்து பேசிய  முனைவர் ஜார்ஜ் மரியண்ணன் அவர்கள் " சினிமா பாடல் வடிவம் தாங்கிய கவிதைகள் தான் இந்த உறங்கும் பூக்களே விடிந்ததும் கூறுங்கள். கனவும் சொட்டும் கவிதையும் சொட்டும் கவிதைகளில் இசையும் சொட்டினால் இந்த பூக்கள் சினிமாவில் மலரும். தெம்மாங்கு பாடல்கள், காதல் ரசம் சொட்டும் பாடல்கள் அதிகம் இருக்கின்றன. 

பெண்ணவள் முன் நின்று
தாய் என்பான்
பின் நின்று வா என்பான்
கடந்து வந்த பாதை முள் என்பான்
கண் முன்னே முள் இருந்தால்
காலம் எனக்கு இல்லை என்பான்


உயிர் என்று வந்து விட்டால்
நீ என்ன நான் என்ன
நாய் என்ன நா¢ என்ன
இதை உணர்ந்தும்
மனம் உறங்கும் என்றால்
நீ உயிர் வாழ்ந்து பயன் என்ன


என நூலிலிருந்து பல வரிகளை சுட்டிக் காட்டி விளக்கினார்.


இதய நோய்களும்  நவீன சிகிட்சை முறைகளும் என்ற நூலினை மதிப்புரை செய்து பேசிய  முனைவர் ஜார்ஜ் மரியண்ணன் அவர்கள் இதயம் என்பதை சித்த மருத்துவத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். எவருக்கும் எளிய முறையில் இதய சிகிட்சை பற்றி விளக்கும் இந்த நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்குமென்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்ற தெம்போடு கவலையின்றி உங்களை இருக்க வைக்க இந்த நூல் உதவும் என்றார்.

கவியாட்படை என்ற நூலினை மதிப்புரை செய்து பேசிய பாவலர் வே.முனுசாமி அவர்கள் "36 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து உருவாக்கியுள்ள முதல் நூல் என்ற பெருமைக்கு உரிய இந்த நூல் கவி உலகில் புதுமையான ஒன்று" என்றும் "கவிதையை மக்களிடம் எடுத்துச்செல்ல இது போன்ற புதுமைக் கவிஞர்களின் சேவை தேவைக்குரியது" என்றும் நூலாசிரியர்கள் என்ற தகுதிக்கு சில விதிமுறைகள் வேண்டும். வெறும் காதலைத்தான் எழுதியிருப்பார்கள் இளம் கவிஞர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு கவிஞரும் புதிய புதிய சமூகம் இயற்கை கலந்த தலைப்புகளில் சிறப்பாக எழுதி நூலாசிரியர்கள் என்ற தகுதியினைக் காட்டியிருக்கிறார்கள்.

“எந்திரங்கள் ஏந்தி எம்மோடு வாருங்கள்
அந்தரப் பந்தினில் அணைதனை அமைப்போம்
சந்திரக் கழனிதனில் சம்பா விதை விதைப்போம்
இந்திரன் சபைக்கும் இனி  நீர் கொடுப்போம்...” என ஒரு கவிஞர் எழுதியுள்ளக் கவிதையின் தலைப்பு நிலாவில் அணைக்கட்டு. எதுகை மோனைகள் ருசிக்கின்றன. இந்த நூல் முழுக்க தகுதி வாய்ந்த கவிதைகளே உள்ளன. 

தனித்திருக்கும் வயலோர வேப்பமர அழகு கவிதை 
அதில் துணைபிரிந்த வேதனையில் கத்துங்குயிலோசையும் கவிதை - என கவிதை பற்றி ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது சிறப்பு என்றார்.


விழா மேடையில் பேசிய செ.பா.சிவராசன் "இந்த மேடையில் இரண்டு பிரபல கவிஞர்களை ஒரு சேர பார்க்கின்ற பாக்கியம் கிடைத்திருப்பது நமக்கெல்லாம் பாக்கியம் என்றும்.. கவிஞர் அண்ணாமலை அவர்கள் " என் உச்சி மண்டையில சுர் ங்குது... என்ற பாடலால் திரை உலகில் அறியப்பட்டவர் என்றும் கவிஞர் பிரியன் அவர்கள் மக்காயாலா, மஸ்காரா பாடல்களால் மக்கள் மனதைத் தொட்டவர் என்றும் பேசினார். பின்னர் பேசிய கீதம் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.ஞானசி அவர்கள் நூல்கள் வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி விளக்கினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் திரைப்பட பாடலாசிரியர்களின் திரு கரங்களால் நூல்களைப் பெற்றபடியே விழா 6.30 மணிக்கு நிறைவடைந்தது. 250 க்கும் மேற்பட்டோர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.