Go to content Go to menu

 

 

சென்னைப் புத்தகக் காட்சியில் 04-06-2016 அன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் எனது  ஏற்புரை.

 

அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு .

பதிப்பாளர் குடும்பம் , படைப்பாளர் குடும்பம், வாசகர் குடும்பம்  என மூன்று குடும்பங்கள் கொண்டாடுகின்ற இந்த  39 வது சென்னை புத்தகக் காட்சியின் நான்காம் நாள் இன்னும் கொஞ்சம் அழகானது. இது போன்ற புத்தகக் காட்சிகள் தான் மனிதர்களை வாசகர்களாக பிரசவிக்கிறது. அன்று.. அம்மாவிடம் சாதம் சமைப்பது எப்படி எனக் கற்றுக் கொண்டவள் இன்று பிரியாணி சமைப்பது எப்படி என்பதை புத்தகம் படித்துத்தான்  தெரிந்து கொள்கிறாள். நாளுக்கு நாள் வாசிப்பு மேம்பட்டுக்  கொண்டுதான் வருகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.  மக்களை ஆளுகின்ற தலைவர்களிடமும், இளைஞர்கள் பாலபிசேகம் செய்கின்ற நடிகர்களிடமும் கூட வாசிப்பு பழக்கம் இருந்திருக்குமென்றால் தெருவுக்குத் தெரு நூலகங்களும் வீட்டுக்கு வீடு வாசகர்களுமாக இருந்திருப்பார்கள்.

 

அமைதியை மட்டுமே தருவது தியானம். அமைதியோடு அறிவையும் சேர்த்துத் தருவதுதான் வாசிப்பு. அதனால்தான் வாசகர்கள் வாசிப்பதை நிறுத்துவதில்லை. வாசகர்கள் வாசிப்பைத் தொடர்கிறார்கள் என்பதற்கான சான்றுதான் இந்த நூல் வெளியீட்டு விழா. இங்கு வெளியிட்ட நூல்களின் ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அதனால்தான் வாசகர்கள் படைப்பாளர்களாக மாறி வாசிக்கத் தூண்டுகிறார்கள். இந்த நாள் ஆறு சந்திராயன்களை ஏவிய நாள். சந்திரனை ஆராய அல்ல. சமூகத்தை  ஆராய.

            எந்த இதயத்திலும்

            நல்ல கனவுகள் இருக்கலாம்

            சில அடைப்புகளோடு சேர்ந்து..!

மனிதக் கனவுகள் இன்று மாரடைப்பு என்றதும் மரணித்து விடுகின்றன. மாரடைப்பு என்றதும், அல்லது நெஞ்சு வலி என்றதும் பயப்பட வேண்டாம். தொடர்ந்து உங்கள் கனவுகளுக்கு வண்ணம் தீட்டுங்கள். உங்கள் இதய நோய்களை ஆராய பி.டி. வசந்த் அவர்கள் எழுதிய நூல் “இதய நோய்களும் அதற்கான சிகிட்சை முறைகளும்”.

 

தமிழன் வீரன் என்றால் எழுத்தும் போர்தானே..! காலாட்படை மருவி விட்டது. கவியாட்படையாக உரு மாறி இருக்கிறது. இனி இந்த தேசத்தில் கவிதைகளும் போர் செய்யும்.  காலம் கெட்டதை கவிதைகள் தட்டி கேட்கும். 36 கவிஞர்கள், 36 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து உருவாக்கிய நூல் கவியாட்படை

 

மொழியின் தவழும் குழந்தைதான் கவிதை. தவழும் குழந்தை ஒரு பொருளை எடுக்க முயற்சிப்பது முதல் எடுப்பது வரை எதிர்பார்ப்புகள் மனதை சுற்றிவரும். உள்ளத்து முற்றத்தில் இன்பங்கள் ஓடி விளையாடும்.

அந்த வகையில், 

      இரவு..

         விடியலை

       இரவல் வாங்க

          இரவோடு இரவாக

       என்னதான் செய்திருக்கும்..?

           உறங்கும் பூக்களை

        விடிந்ததும் கூறச்சொல்லி

சமூகத்தின் தூக்கத்தைக் கலைத்திருக்கும் கவிஞர் இளையராஜா அவர்களின் கவிதை நூல் “உறங்கும் பூக்களே விடிந்ததும் கூறுங்கள் “

 

முன்பெல்லாம் நாகரிகம் நட்போடு இருந்தது சில கட்டுப்பாடுகளோடு.ஆனால் இன்று நட்பு நாகரிகத்தோடு இருக்கிறது. யாதும் ஊரே யாரும் கேளிர் என்ற நிலை ,மாறி யாதும் ஊரே யாவரும் நண்பர்கள் என மாறி விட்டதை முக நூல்கள் நம் முகங்களில் காட்டுகின்றன. காதலர்கள் நண்பர்களாக மாறுவதையும், நண்பர்கள் காதலர்களாக மாறுவதையும் சமூகம் அனுமதித்திருக்கிறதா இல்லையா என்பதற்கு விடை கண்டு ஆண்பெண் காதலையும் ஆண்பெண் நட்பையும் பிரித்து வடிகட்டியுள்ள அறிமுக எழுத்தாளர்  விஜய நேத்ரன் அவர்களின் நூல் “வேள்விப் பூக்கள்” எனும் நாவல்

இந்த தமிழகம் இப்படியே இருக்குமா..? இப்படித்தான் இருக்குமா.. இல்லை இப்படியும் இருக்குமா என்பதை ஒரு முதல்வரின் நாட்குறிப்பால் விளக்கியுள்ள டைரிதான் “முதல்வரின் நாட்குறிப்பு”

எண்களின் கூட்டுதான் எழுத்து. ஒவ்வொரு எழுத்தையும் மாத்திரையின் அளவுள்ள எண்கள்தான் தீர்மானிக்கின்றன. “எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப” என்றும் எண் எழுத்து இகழேல் என்றும் முன்னோர்கள்  முதலிடம் கொடுத்த எண்களைக் கொண்டு உருவான நூல்  “கணக்கதிகாரம்-2” இந்த நூல்களைப் பதிப்பித்த கீதம் பதிப்பத்தின் உரிமையாளர் திரு ஜானாசி அவர்களுக்கும் நூலாசிரியர்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமையேற்று நடத்திய திருக்குறள் ஆய்வுச்செம்மல் முனைவர் எழில் சோம. பொன்னுசாமி , தலைவர், எழில் இலக்கியப் பேரவை, ஆவடி அவர்கள் ஆற்றிய தலைமை உரை மற்றும்  கணக்கதிகாரம் -2 என்ற நூலிற்கு மதிப்புரைத்துக் கூறிய கருத்துக்களை ஏற்றும்,

 

நூல்கள் வெளியிட்டு சிறப்புரை வழங்கிய  திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை மற்றும் முதல் பிரதிகளைப் பெற்று சிறப்புரை வழங்கிய  திரைப்பட பாடலாசிரியர் பிரியன் அவர்கள் ஆற்றிய சிறப்புரையினையும் ஏற்று அனைத்து நூலாசிரியர்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.  வாழ்த்துரை வழங்கிய   செம்மொழிப் போராளி கவிஞர் க.ச. கலையரசன் பொதுச்செயலாளர் – தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்  சங்கம் அவர்கள் வாழ்த்திய வாழ்த்துரையினையும் ஏற்று

 

P.T வசந்த் அவர்கள் எழுதிய இதய நோய்களும் நவீன சிகிட்சை முறைகளும் மற்றும் விஜய நேத்ரன் அவர்கள்  எழுதிய வேள்விப் பூக்கள் எனும் நூலினையும் மதிப்புரை செய்த திருமந்திர ஆய்வுச்செம்மல் முனைவர் ஜார்ஜ் மரியண்ணன்  அவர்களின்  மதிப்புரையினையும் ஏற்று, கவியாட்படை நூலின் ஆசிரியர்களாகிய பாவலர் கருமலைத்தமிழான், கவிஞர் விஸ்வநாதன், கவிஞர் அருண் வேந்தன், கவிஞர் முத்துமணி, கவிஞர் மணி அமரன், மனக்கவிஞன், கவிஞர் மகாலட்சுமி, கவிஞர் மதுர தேவி, கவிஞர் நிஷா, கவிஞர்  பூஜ்யா, கவிஞர் பாண்டூ, கவிஞர் நவீன் குமார், கவிஞர் விருத்தாச்சலம் குரு, கவிஞர் மோனிகா இரவி, கவிஞர் அரவிந்தன், கவிஞர் பூவன், கவிஞர் பொலிகையூர் ரேகா, கவிஞர்  கே.ஆர் இராசேந்திரன், கவிஞர் மட்டுநகர் கமல்தாஸ், கவிஞர் பூ.முல்லை ராஜன், கவிஞர் தமிழ் முகில், கவிஞர் கி. உதயகுமார், கவிஞர் மாரிமுத்து ராஜா கவிஞர் கவி நேசன், கவிஞர் இத்ரிஸ் எம் பாண்டி , கவிஞர்  மோ.மோனிஷா, கவிஞர் புலமி, கவிஞர் செ.செல்வமணி , கவிஞர் இரா .பி , கவிஞர் மு. வடிவேல், கவிஞர் மைதிலி ராம்ஜி, கவிஞர் தமிழரசு, கவிஞர் நித்யா கோபி நாதன், கவிஞர் சலாவுதீன், கவிஞர் இன்போ அம்பிகா மற்றும் என் சார்பாக இந்த நூலினை மதிப்புரை செய்த சிலம்பிடைப் பாவலர் வே . முனுசாமி அவர்களின் மதிப்புரையினையும் ஏற்று, கவிஞர் இளையராஜா அவர்கள் எழுதிய உறங்கும் பூக்களே விடிந்ததும் கூறுங்கள் என்ற கவிதை நூலினையும்  மதிப்புரை செய்த சிலம்பிசைப் பாவலர் வே. முனுசாமி அவர்களின்  மதிப்புரையினையும் ஏற்று, முதல்வரின் நாட்குறிப்பு என்ற நூலினை  மதிப்புரை செய்த கவி.தங்க. ஆரோக்கியதாசன் அவர்களின்  மதிப்புரையினையும் ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கின்ற அனைத்து வாசகப் பெருமக்களுக்கும், இந்த புத்தகக் காட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பபாசி குழுவினருக்கும் நன்றி கூறி ஏற்புரையினை நிறைவு செய்கிறேன்.

    நன்றி

 

 

 

 

21-06-2015 அன்று வடலூர்,வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக நல அறக்கட்டளை நடத்திய திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் செ.பா. சிவராசன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

பாரதத்தாயின் கைகளுக்கு திருக்குறள் நூலினைக் கொடுக்க வேண்டுமென்று ஒருமித்துக் குரல் கொடுக்க , கூடி  இம் மாநாட்டை சிறப்பித்துக் கொண்டிருக்கும் நமக்கு திருக்குறளைத் தேசிய நூலாக்கக் கூடுவது என்பது ஒன்றும் புதிதல்ல.

திருக்குறளைத் தேசிய நூலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியதோ அப்போதே அந்த எண்ணம் பாதி வெற்றி அடைந்து விட்டது. பாதி வெற்றி கண்ட எண்ணங்களோடு நாம் இங்கே கூடியிருக்கிறோம் என்றால் நமது எண்ணம் முழு வெற்றி பெற்று விட்டது. இந்தியர்கள் எப்போதோ திருக்குறளைத் தேசிய நூலாகக் கருதி மதிக்கத் தொடங்கி விட்டார்கள். பிச்சைக்காரனுக்கு பிச்சைக் கொடுக்கும் பழக்கம் எப்போது இந்தியர்களுக்கு வந்ததோ அப்போதே அவர்கள் திருக்குறளின் ஈகை அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். எப்போது தியானம் செய்ய கற்றுக்கொண்டார்களோ அப்போதே திருக்குறளின் தவம் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். எப்போது கல்வி அடிப்படை உ ரிமை ஆக்கப்பட்டதோ அப்போதே அரசாங்கம் திருக்குறளின் கல்வி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக யாவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உலகப்பொதுமறையினை நாம் நமது தேசிய நூலாக மாற்ற வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் இந்த மாநாடு. ஒரு மரத்தின் எல்லா இலைகளுமே நம் பார்வைக்கு கிடைத்து விடாது. அது போல இந்த மாநாட்டில் கூடியிருப்பவர்கள் மட்டும்தான் திருக்குறளைத் தேசிய நூலாக்க  வேண்டும் என்று கூடியிருக்கவில்லை. மாறாக , உலக நாடுகளில் வாழ்கின்ற இந்தியர் பலர் இங்கே பங்கெடுக்க முடியாமல் ஆதரவு   தெரிவித்து உள்ளார்கள். மேலும், நமது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொள்ள முடியாது எனவும்       மாநாடு சிறக்க வேண்டும். திருக்குறளைத் தேசிய நூலாக ஆக்கியே தீர வேண்டும் எனவும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர். இப்படி திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என ஆதரவுத் தெரிவிப்பவர்களைக் கணக்கிட்டால் இந்தியரில் 80 சதவிகிதம் பேர் இருப்பார்கள். இந்த 80 சதவிகித பேருக்கும் சார்பாக நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
பல்வேறு கட்ட நமது போராட்டங்கள், நமது போராட்டங்கள் போல் வேறு சில இலக்கிய அமைப்புகள் நடத்தியப் போராட்டங்களுக்குப் பிறகும் கூட தேசிய நூலாக்கும் பொறுப்பைப் பெற்றுள்ள மத்திய அரசாங்கம் தேசிய நூலாக்கும் பொறுப்பை செய்யவில்லை என்றால், சாதாரண இந்திய மக்கள் அறிந்த அளவிற்குக் கூட அரசியலில், ஆட்சியில் இருப்பவர்கள் அறியாமல் இருப்பதே காரணம். ஆனால் இந்த அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருக்கும் தருண்விஜய் அவர்கள் திருக்குறளை உணர்ந்தவர். அதன் கருத்து வளத்தில் திழைப்பவர். இந்திய இளைஞர்களின் சிற்பி கலாம் அவர்கள் திருக்குறள் வழி வாழ்பவர், திருக்குறள் மீது அளவுக் கடந்த பாசம் வைத்திருப்பவர். திருக்குறளை அரேபிய மொழி மற்றும் சீனத்தின் மாண்டரிய மொழியில் மொழிபெயர்க்க உதவிய இந்நாள் முதல்வர் என அரசியலில் இருப்பவர்கள் மத்திய அரசுக்கு எடுத்துக் கூறினால் நமது ஆதரவோடும் , உழைப்போடும் இன்னும் விரைவில் திருக்குறள் தேசிய நூலாகி விடும் என்ற கனவு இருக்கிறது.
சிறுவிரலைக் காட்டிலும் எத்தனை எத்தனை மடங்கோ சிறிய திரி மெழுகுவர்த்தியில் இணைந்து , வீட்டிற்கு வெளிச்சம் கொடுப்பதைப் போல இரு அடிகளால் ஆன திருக்குறள் தேசிய நூல் என்ற மெழுகுவர்த்தியில் இணைத்தால் உலகத்தில் இந்தியா ஒளிரும். இந்தியாவை ஒளிமயமாக்கவே அருள்சோதி ஞானப்பிரகாச வள்ளலாரின் இடத்தில், சக்தி வாய்ந்த மாநாட்டினை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த நமது நாட்டின் பிரதமர் ஒபாமாவிடம் பகவத் கீதையினைக் கொடுத்திருக்கிறார். தமக்கு விருப்பமான நூல்களைப் பரிசளிப்பது என்பது இயல்பாக நடக்கும் செயல்தான், இதனை அறிந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் அந்த செயலின் மீது ஒரு கற்பனையை ஏற்றி, மதுரைக்குள் கோவலனும் கண்ணகியும் நுழைந்தபோது மதில்கொடி அசைந்ததைக் கொண்டு மதுரைக்குள் வரவேண்டாம் என இளங்கோவடிகள் கற்பனையை ஏற்றிக் கூறியதைப்போல, மத்திய அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அவர்களும் ஒரு கற்பனையை ஏற்றி, எப்போது பிரதமர் ஒபாமாவிற்கு கீதையைக் கொடுத்தாரோ அப்போதே தேசிய நூல் ஆகி விட்டதாம். இனி அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார். அப்படிப் பார்த்தால் கீதைக்கு முன்பே உலகத்தின் கைகளுக்கு திருக்குறளை திருவள்ளுவர் கொடுத்துச்சென்றுள்ளாரே.. இதை ஏன் இன்னும் தேசிய நூலாக அறிவிக்கவில்லை..?
கீதையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது என்பதால் கீதையைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். திருக்குறள் என்ற உலகப் பொதுமறை ஒன்று இருக்கிறது. அதைப் படியுங்கள். குடும்பத்திலும் குடும்பம் மூலம் சமூகத்திற்கும் பிரச்சினை உருவாகும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை திருக்குறளுக்கு இருக்கிறது. என்பதை உணர்வீர்கள். அதற்குப் பிறகு சிந்தியுங்கள். பிரச்சினைகளை உருவாக்கத் தூண்டி விட்டு விட்டு அப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற நூல் தேசிய நூலுக்கு தகுதி உடையாதா..? இல்லை பிரச்சினைகளே எழாமல் பாதுகாக்கும் நூலானத் திருக்குறள் தேசிய நூல் தகுதி உள்ளதா என்று நீங்களே முடிவு செய்துக் கொண்டு நிறைவேற்றுங்கள்.

தாம், சமய சார்பற்ற இந்திய தேசத்தை ஆட்சி செய்கிறோம் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் ஆட்சி நடத்துபவர்களே..! மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால் ஒரு தேசிய நூலாக வைக்கப்பட தகுதி இல்லை. ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சார்பற்றத் தன்மையைக் குலைப்பதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 
அடுத்ததாக, கடந்த டிசம்பர் மாதம் இந்து நாளிதழ் "தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல..இந்திய அரசியலமைப்பு சட்டமே" என்று தலையங்கம் ஒன்று எழுதியிருக்கிறது. அவருக்கு திருக்குறள் என்ற நூல் இருப்பது  தெரியவில்லை போலும். "கடன்களின் பொதி " என அழைக்கப்படுகின்ற அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியும் அவர், அறிந்திருக்கவில்லை. கனடாவிலிருந்து கடன் வாங்கித் தானே கூட்டாட்சியை வைத்திருக்கிறோம். அமெரி க்காவிலிருந்து அடகுக்கு வாங்கித் தானே அடிப்படை உடமைகளை வைத்திருக்கிறோம். சோவியத் யூனியனிடமிருந்து எடுத்துத்தானே கடமைகளை வைத்திருக்கிறோம். இப்படி அடிப்படை கடமைகளையும்,உரிமைகளையும் கூட கடன் வாங்கி வைத்திருக்கும் இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தை தேசிய நூலாக்க வேண்டுமா..? இல்லை சாதி சாராமல், மதம் சாராமல், இனம் சாராமல் ஒருமைப்பாட்டை  பெரிதும் விரும்புகின்ற இந்தியாவிற்கு , பேச்சுரிமை,எழுத்துரிமை,சொத்துரிமை,பாதுகாப்புரிமை, பணி உரிமை, வாழும் உரிமை, மறைந்த பின்பும் பெயரும்,புகழும்,பொருளும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை என மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான அமைப்புச் சட்டம் உள்ள திருக்குறள் தேசிய நூலாக்கப்பட வேண்டுமா..?
அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமையைப் பற்றி புறங்கூறாமை,பயனில சொல்லாமை,சொல்வன்மை ஆகிய அதிகாரங்கள் இருக்கின்றன. கல்வி பெறுவது அடிப்படை உரிமை, இதற்கு கல்வியின் பெருமை எனும் அதிகாரம் உள்ளது. நடுவு நிலைமை,ஒழுக்கமுடைமை,தீவினையச்சம்,கூடா ஒழுக்கம்,கள்ளாமை,இறைமாட்சி,குற்றம் கடிதல்,சிற்றினஞ்சேராமை,செங்கோன்மை,கொடுங்கோன்மை,ஒற்றாடல், அமைச்சு,தூது, நாடு, சூது,கயமை போன்ற பல அதிகாரங்கள் சட்டத்தோடு தொடர்பு உடையதாக அமைந்திருக்கும் போது அரசியலமைப்புச்சட்டத்தைக் கூட திருக்குறள் நூலின் வழியாக புதிதாக உருவாக்க முடியும்.
மக்கள் மனவளம் பெற்றால்தான் அவர்கள் வாழ்வு முறையுடையதாக,அமைதியுடையதாக துலங்க முடியும்.  மக்கள் மனவளம் பெற வேண்டுமானால் திருக்குறளின் கருத்துக்கள் தேவை. குறளின் கருத்துக்களை ஏற்று நடந்து மனவளம் பெற மத்திய அரசாங்கம், திருக்குறளைத் தேசிய நூலாக்க முன்வரவேண்டும். " நாட்டை ஆள்பவருக்கு காலந்தாழ்த்தாமை,கல்வியுடைமை,துணிவுடைமை ஆகியன இருக்க வேண்டும் என்று 383 வது குறள் கூறுவதைப் போன்று நாட்டை ஆளும் மத்திய அரசாங்கம் காலம் தாழ்த்தாமல், அறிவுத்தன்மையோடு, துணிவோடு திருக்குறளைத் தேசிய நூலாக்க முன்வரவேண்டும். மன்னன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி நடத்துவானேயானால் அவனுடைய ஆட்சி விரைவில் அழியும், அதற்கும் மாறாக ஆட்சி புரிபவனாக இருந்தால் அவன் கொடுங்கோலன் என மக்களால் தூற்றப்படுவான் எனக் கூறுகிறது திருக்குறள் . ஆகவே இந்திய மக்கள்  பெரிதும் மனமுவந்து விரும்புகின்ற திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும்  என்ற கோரிக்கையினை நிறைவேற்றி நற்பெயர் எடுக்க முன்வருக. இப்போது ஆழும் அரசுக்கு மதவாத ஆட்சி என்ற முத்திரை பலரால் பொறிக்கப்பட்டுள்ளது. இது பொய் என நீங்கள் நிரூபிக்க எம்மதத்தவரும் ஏற்றுக் கொண்ட பொதுமறையாம், திருக்குறளை தேசிய நூலாக்குவதால் மட்டுமே முடியும்.
தினமணியும், சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து 2014 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் இலக்கிய திருவிழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள் அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற குறள்தான் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது என்றும் "தற்போது உலக அளவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் திருக்குறளில் இருக்கும் கருத்துக்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவது அவசியம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். திருக்குறள் சிறந்த வழிகாட்டி நூல் என மத்திய அமைச்சர் தருண் விஜய் அவர்கள் கூறியுள்ளார். 2010 -ஆம் ஆண்டு   கனடாவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜீனிதா நாதன் என்ற பெண்மணி திருக்குறளின் மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபிமொழித்துறை தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜாகிர் உசேன் என்பவர் மார்ச்  மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச அரபுக்கவிஞர்கள் மாநாட்டில் தமிழக அரசின் உதவியுடன் திருக்குறளை அரபி மொழியில் வாசித்துக் காட்டி திருக்குறளை அரபி மொழியிலும் கொண்டு சென்றுள்ளார்.இப்படியாக மெல்ல மெல்ல திருக்குறள் தேசிய நூலாக மாற மாறி வந்து கொண்டிருக்கும் இக் காலக்கட்டத்தில், கார்லைல் என்ற பேராசிரியர் , ஒரு நாட்டிற்கு மக்களை இணைத்துப் பிணைக்க வலிமைப் பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அந்த வகையில் மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் திருக்குறள் மட்டுமே. 
இந்திய நாட்டின் இணையற்ற தேசிய நூலாகத் திருக்குறளை ஏற்றுக் கொண்டு, இந்தியத் திரு நாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும்,திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானாகவே உருவாகும் என்கிறார் குன்றக்குடி அடிகளார். இவ்வாறாக இந்தியர்  பெரிதும் விரும்புகின்ற இத் திருக்குறள் தேசிய நூலானால், பிரபஞ்சத்திலும் கூட சில மாற்றங்கள் நிகழும்.

புவி விசையின் திசையும் 
கொஞ்சம் இடம் மாறும்

ஓசோனின் ஓட்டையடைக்க
ஓசோன் துண்டுகள் கொஞ்சம் உருமாறும்

செயற்கைக் கோள்கள் கூட
இன்னும் கொஞ்சம் காலம் கூட ஆயும்

இயற்கைகள் கூட இயற்கையாய்
பூமியில் கொஞ்சம் நடை போடும்

வான் மழையும் 
மண்ணுக்குக் கொஞ்சம் உரம் போடும்

பூகம்பத்தின் பூக்கள் கூட 
பூமிமீது கொஞ்சம் இரக்கம் காட்டும்

சுனாமியின் திசைகள் கூட
கொஞ்சம் கடலுக்கே திசைமாறும்

பஞ்சம் கூட பக்கம் வர 
கொஞ்சம் பதுங்கி நின்றாடும்

கொஞ்சம்கூட வஞ்சமும்
நஞ்சு தின்னு போய் சேரும்

அரசியல் வானம் அதிசயம் கூட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் நேர்மை தலை காட்டும்

சமூகப்பிழை சரித்திரமாய் மாறும் நிலை
சாய்ந்து ஒழிந்தே போகும்

பிறவிகளைப் பிரிக்கும் நிலை
பிறப்பிலேயே சாகும்.

கெடுதியோடு கட்டும் அணைகள்
மடை திறந்து சாடும்

டில்லியின் கற்பழிப்புக்கு
கடும் பஞ்சம் வந்து சேரும்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உலகம்
நீங்கள் ஆழக் கிடைக்கும்

திருக்குறளைத் தேசிய நூலாக்கிப் பாருங்கள்
உங்கள் புகழ்
ஒவ்வொருவருக்குள்ளும்
தோன்றி தோன்றி பிறக்கும் 

என்று கூறி , கடலைப் போன்ற பரந்த மனப்பான்மையுடன் கடலூர் மாவட்டத்தில் சக்தி மிகுந்த திருக்குறள் தேசிய நூல் மாநாட்டினை நடத்த உதவிய தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின் கடலூர் கிளை தலைவர் கவிஞர் இரா. வேல்முருகன், செயலாளர் கவிஞர் வேம்பு தர்மலிங்கம், ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ஜெயந்தி ஜெகதீசன்  ஆலோசகர் கவிஞர் ராஜன் பாபு , பேராசிரியர் வேல்முருகன்  அவர்களை உள்ளபடியே வாழ்த்தியும், திருக்குறளைத் தேசிய நூலாக்க ஆட்சி மாறும் போதெல்லாம் அடுக்கடுக்காய் அராய்ந்து அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள்,     மாநாடுகள் என திருக்குறளுக்காய் நம்மை எல்லோரையும் இணைத்து வழி நடத்துகின்ற தமிழக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான தேசிய நூல் போராளி கவிஞர் க.ச கலையரசன் அவர்களை நன்றியோடு வணங்கியும்,  திருக்குறள், தேசிய நூலாக்கப் பட்ட பிறகுதான் இந்தியா வல்லரசு ஆகும் என்றாலும் இந்தியாவை வல்லரசுப் பாதைக்கு அழைத்து செல்லும் பயணத்தில் ஒன்றான திருக்குறளைத் தேசிய நூலாக்க இங்கே கூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன். நன்றி.

 

-----------------------------------------------------------------------------------------------

20-01-2015 அன்று 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில்"ஒருத்தி ஒருவனுக்கு" நூல் வெளியீட்டின் போது செ.பா.சிவராசன் அவர்கள் ஆற்றிய ஏற்புரை.

"அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு"

தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியின் மேடையை அழகாக்கி உள்ள சான்றோர்க்கும் சான்றோரை வரவேற்க வந்திருக்கும் ஆன்றோர்க்கும் , புத்தகத்தின் கை கோர்க்க அந்த புத்தகம் இந்த புத்தகம் என முடிவெடுக்கும் பணியை செய்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த உலகத்திலேயே இதுவரை திரையில் வராத ஒரு கதையை எழுதிவிட வேண்டும் என்ற ஒரேயொரு பேராசைப் பிம்பத்தின் பிரதிபலிப்பு கீதம் பதிப்பகம் என்ற ஆடியின் மூலம் 38-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிறைவேறியிருப்பது மிக்க மகிழ்வை அளிக்கிறது. எந்தவொரு படைப்பாளனையும் ஊக்குவிக்கும் ஆற்றல் பெற்றவர் கீதம் பதிப்பத்தின் நிறுவனர் ஞானசி அவர்கள். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி உரைப்பதன் மூலம் நான் நிறைவு பெறுகிறேன்.

தமிழே தெரியாத இளைய தலைமுறையினருக்கு , தமிழ் சமுதாயத்தின் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற கட்டுப்பாடு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாறி வரும் உலகில் திருமணமில்லாமல் ஒன்றி வாழும் முறை வந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் "ஒருத்தி ஒருவனுக்கு" என்ற நூல் வெளிவர வேண்டியது அவசியம்தான் எனக் கருதுகிறேன்.

கலாச்சாரப்படி தவறானவைகளை, சட்டப்படி சரியாக்க முயல்வது இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையாக மாறி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்த முத்தப் போராட்டம். கலாச்சாரபடி தவறு. ஆனால் நீதிமன்றத்தின் சட்டப்படி சரியாகிவிட்டது. இவ்வாறாக நம் இந்திய நாட்டின் காக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள் மறக்கப்படுவதையும் மறக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள் காக்கப்படுவதையும் மையமாக வைத்து ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனுக்குள் பல சோதனைகளைத் திணித்தேன். எழுத்தாளன் பணி செய்யும் பொருட்டு அவன் வாழ்ந்த ஊரின் நிகழ்வுகளைப் பதிவாக்கினேன். என் மனதில் இருந்து வெளியே வந்து அவன் அவனது கடைசி ஆசையைச்சொல்லி என்னிடம் கெஞ்சுவது போன்று எனக்குள் தோன்றியது. அவனது கடைசி ஆசை வேறொன்றும் இல்லை. எவரேனும் ஒருவர் அவனை நல்லவன் என சொல்வதைக் கேட்டு விட்டு உயிர் விட வேண்டும் என்பதுதான். அவனை நல்லவன் என்பதா..? இல்லை கெட்டவன் என்பதா..? என்பதை வாசகர்களின் முடிவுக்கு விட்டுள்ள இந் நாவலை எழில் இலக்கியப் பேரவையின் தலைவர் "திருக்குறள் மாமணி எழில் சோம.பொன்னுசாமி" ஐயா அவர்கள் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. என்னைக் கவிஞராக தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தில் அறிமுகப்படுத்தியப் பெருமை பொன்னுசாமி ஐயா அவர்களையே சாரும்.

இந்த நூலின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்ட கவிஞர் பழனிகுமார் மற்றும் நாகை முகுந்தன் அவர்களுக்கு நன்றிகள் பல. இந்தப் புதினத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. இந் நூலினை வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மை கிடைக்க வேண்டாமா..என யோசித்தேன். இந் நூலினை மேலோட்டமாக வாசிப்பவர்கள் கூட ஒரு நாள் நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்களைப் போன்றோ... முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களைப் போன்றோ முக்கிய ஆட்சி பொறுப்புகளில் அமரும்போது இந்த நூலின் கதாநாயகன் கொலை,கொள்ளை,வன்முறை,பாலியல் வன்முறை போன்ற கலாச்சாரச்சீரழிவுகளை முழுவதுமாக நீக்க எந்த முறையைக் கையாண்டானோ .. அவையெல்லாம் அவர்கள் நினைவில் அவர்கள் நினைவுகளை அவர்கள் நினைவுகள் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.


நூலினைத் தேர்வு செய்யும் வாசகர்கள் இந்த "ஒருத்தி ஒருவனுக்கு" என்ற நூலையும் சேர்த்து தேர்வு செய்ய வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். இந் நூலினை வாங்காதவர்கள் இந் நூலின் பின்பக்க அட்டையில் அச்சிடப்பட்டுள்ள சில வரிகளைப் படித்து விட்டு உங்கள் மனதில் தோன்றும் பதிலை இப் பிரபஞ்சத்தில் சொல்லாக போட்டு வைத்துக்கொள்ளுங்கள் என அன்பாய் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந் நூலினைப் பற்றி வாழ்த்துரைத்த அனைவர் வாக்கையும் ஏற்று அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இந் நூலினை நேசிக்கும் மனங்களோடு வாசித்து ஏற்பார்கள் என உறுதி ஏற்று அனைவருக்கும் நன்றி கூறி ஏற்று ஏற்புரையை நிறைவுச் செய்கிறேன். நன்றி.